மாவிலை

மாமரம் தென்னாசியாவைத் தாயகமாகக் கொண்டு வளரும் ஒரு தாவரமாகும். இதன் இலைகள், பழங்கள், விதைகள் அனைத்தும் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில், பலவகையுண்டு. அவற்றுள் கறுத்தக்கொழும்பான், வெள்ளைக் கொழும்பான், விலாட்டு, புளி மா, பச்சதின்னி, கிளிச்சொண்டான், சேலம், பாண்டி என்பன இலங்கையில் பிரசித்தி பெற்றவை.

35 – 40 மீற்றர் உயரம் வரை வளரக்கூடிய இத்தாவரமானது, 35 ஆண்டுகள் வரை காய்க்கும் தன்மை வாய்ந்தவை.

முக்கனிகளில் ஒன்றாக அழைக்கப்படும் மாம்பழம் பல அரிய ஊட்டச் சத்துக்களை கொண்டிருந்தாலும், அதன் இலை, மரப்பட்டை, பிசின், பூ, பிஞ்சு என அனைத்தும் சித்த மருத்துவத் துறையில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இருப்பினும், அண்மையில், மாவிலையானது, நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற வியாதிகளுக்கு சிறந்த நிவாரணியாகச் செயற்படுவது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த நோயியல் வல்லுநர் வைத்தியர் அடன்ஜி,, மாவிலையை தேநீராகவோ, கொதிக்கவைத்தோ அருந்தி வந்தால் ஆரம்பத்திலிலுக்கும் நீரிழிவு வியாதியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதிலுள்ள காஃபிக் எனப்படும் அமிலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கு உதவுகின்றது. மங்கிஃபெரின் எனப்படும் அமிலமானது இரதத்திலுள்ள கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்டு ஆகியவற்றின் அளவைக் குறைக்க உதவுகின்றது.

இதிலுள்ள பிளேவனொய்ட் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைப்பதுடன், இதய நோய்கள் உருவாவதையும் குறைக்கின்றது.

இதனால் சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்த நீர்க் கட்டிகளை இயற்கை முறையில் இல்லாமல் செய்வதற்கு மாவிலையை தேநீராகவோ அல்லது, ஊறவைத்து அரைத்து நீராகவோ அருந்தலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதைவிட,மாவிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அத்துடன் சிறிது தேன் கலந்து பருகி வர, இரத்தக் குழாய் அடைப்புகளால் உண்டாகும் வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டல் நோயை போக்கி இரத்த அழுத்த குறைபாடுகளை சரி செய்யக் கூடியது. இரத்த அணுக்களை வலுவூட்டி இரத்த ஓட்டத்தை சீராக்கும் வல்லமை மிக்கது.

அத்துடன், மாவிலையில், பல்வேறு வகையான விற்றமின்கள், கனியுப்புக்ள், தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளதால், சுவாசம் தொடர்பான நோய்களைக் குணப்படுத்துவதற்கும் மாவிலைத் தேநீரை அருந்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த எமது மூதாதையர்கள், வீடுகளில் நிகழும் மங்கல மற்றும் அமங்கல நிகழ்வுகளில் மாவிலையில் தோரணம் கட்டி தொங்க விடுவர். இதன்மூலம் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் எவராவது சுவாசம் தொடர்பான நோய்த் தாக்கத்துக்குள்ளானால், அவர்களிலிருந்து ஏனையவர்களுக்கு தொற்றாது பாதுகாப்பதற்காகவே இம்மாவிலைத் தோரணம் கட்டித் தொங்க விட்டனர்.

ஆனால், தற்போது அவர்களின் பாரம்பரியமானது, திரிபடைந்து பிளாஸ்ரிக்கில் உருவாக்கப்படும் மாவிலைத் தோரணங்கள் அலங்காரத்துக்காக கட்டப்பட்டு வருகின்றன. இதனால் சூழல் மாசடைவதுடன், மக்களும் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

ஒவ்வொரு நோய்க்குமான மருந்தை இயற்கை தன்னகத்தே கொண்டுள்ளது. நாம் இயற்கையுடன் ஒன்றித்து வாழும்போது எம்மை தீராத நோய்கள் எவையும் அண்டுவதில்லை.

மாவிலைத் தேநீர் அருந்துவதால் ஏற்படும் பலன்கள்
1. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகின்றது.
2. வெரிக்கோஸ் நாளப் பிரச்சனைக்குத் தீர்வளிக்கின்றது.
3. உயர் இரத்த அழுத்தத்திலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
4. கல்லீரல் மற்றும் பித்தப்பை கற்களை அகற்றுகின்றது.
5. வயிற்றின் வலிமையை அதிகரிக்கின்றது.
6. கீல் வாதம் அல்லது முடக்குவாதத்திலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
7. மோசமான இருமலிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
8. தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
9. காய்ச்சலிலிருந்து விடுதலையளிக்கின்றது.