முள்ளிவாய்க்கால் அழிவின் பின் வட மாகாணத்தில் கிளிநொச்சி நகரத்தில் தோற்றுவிக்கப்பட்ட முதல் சமூக உற்பத்தி நிறுவனமான பொசிபிள் கிறீன் பிரைவேட் லிமிட்டட் இன்று உலக அளவில் தனது பொருட்களை சந்தைப்படுத்துகிறது. நமது தேசத்தில் கிடைக்கக்கூடிய பாரம்பரிய பச்சை இலைகளையும், பழங்களையும் மற்றும் மூலிகைகளையும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தேயிலை வகைகள் பிரித்தானியா கனடா உட்பட உலக நாடுகளில் பிரபலமடைந்துள்ளது. முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் நிறுவனத்தில் தொழில் புரியும் அனைவரும் பெண்களே என்பது தேசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கை சமூகத்திற்கு முன்னுதாரணமாகக் காட்டுகிறது.
எமது பாரம்பரிய மூலிகைகளை தேயிலை வடிவில் தயாரித்து மக்கள் முன் ஆரோக்கிய வாழ்விற்காகக் கொண்டுசெல்லும் இந்த நிறுவனம் கூட்டு உற்பத்தி முறையை மாதிரியாகக் கொண்டு இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது நிறுவனம்.
கிளிநொச்சியின் விவசாய நிலத்தின் இயற்கையின் கொடையை உலகின் மறு முனையிலிருக்கும் வேற்று மொழி பேசும் மனிதனின் தேநீர் கோப்பை வரை கொண்டு சென்று வெற்றி பெற்றுள்ள நிறுவனத்தின் வளர்ச்சியில் சிறு விவசாயிகளின் பங்கும் குறிப்பிடத்தக்கது.